திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்
சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.
இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.