திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்
பெருமாளுக்கு மிகவும் பிரியமான திவ்ய தேசம்
காவிரியில் 108 முறை நீராடிய பலன் தரும் தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருச்சேறை. மூலவரின் திருநாமம் சாரநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட தலம் இது. இத்தலத்து தீர்த்தம் சார தீர்த்தம். இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் காட்சி அளிக்கிறாள். இதற்கான பின்னணியை தல வரலாறு விவரிக்கின்றது.
ஒரு முறை காவிரித் தாய், திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும், வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், 'தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும், கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்' என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். அன்று முதல், கங்கைக்கு நிகராகக் காவிரியும் போற்றப்படலானாள்.
காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரம், இங்கே விமரிசையாகக் கொண்டாடப் பெறுகிறது.
திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.