திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும் சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடையும் அணிவிக்கப்படுகிறது.
சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை, வடமலையப்பப் பிள்ளை என்பவர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நிர்வகித்து வந்தார். 1648 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வந்த டச்சுக்காரர்கள், நம் கோவில்களில் உள்ள ஐம்பொன் விக்கிரங்களை கடத்திச் சென்றால் அதிக பொருள் ஈட்டலாம் என்று திட்டமிட்டனர். அவர்கள் திருநள்ளாறு தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை கடத்திக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் மூலம் செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரம், கடல் கொந்தளித்து, கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கப்பலில் இருந்த டச்சுக்காரர்கள் 'நாம் இந்த சிலைகளைத் திருடிக் கொண்டு வந்ததால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே சிலைகளைக் கடலில் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்தனர். சிலைகளைக் கடலில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
வடமலையப்ப பிள்ளை, சண்முகர் விக்கிரகம் களவு போன செய்தியை அறிந்து மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றை செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். 'வடமலையப்பரே! என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர் படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.
வடமலையப்ப பிள்ளை தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு, ஒரு சிறிய படகில் கடலுக்குள் சென்றார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது. அந்த இடத்தில் கடலுக்குள் குதித்து சண்முகர் விக்கிரகத்தை தேடினார்கள். முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகமும், பின்னர் சண்முகர் விக்கிரகமும் கிடைத்தது. பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி சண்முகர் விக்கிரகத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். கடலில் சிலகாலம் இந்த விக்கிரகம் இருந்ததால், கடல் நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம்.
எம் ரென்னல் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் தன்னுடைய நூலில், சண்முக விக்கிரக கொள்ளையில் சம்மந்தப்பட்ட டச்சுக்காரர் ஒருவரே தன்னிடம் இந்த தகவலை கூறியதாக பதிவு செய்துள்ளார்