திங்களூர் கைலாசநாதர் கோவில்
சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருவையாற்றில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் திங்களூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. நவக்கிரகங்களில் சந்திரன், இத்தலத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.
சிவாலயங்களில், எழுந்தருளி உள்ள பரிவார தேவதைகளில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் இருவர். ஒருவர் சனீஸ்வர பகவான். மற்றொருவர் சண்டிகேசுவரர். இதில் சண்டிகேசுவரர் இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில், அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் அருகில் தியானத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் இத்தலத்தில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
சந்திர தோஷ நிவர்த்தி தலம்
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர தோஷம் ஏற்பட்டிருக்கும் பொழுது, அவருக்கு மனநிலைக் கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும்போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக சென்று வழிபட வேண்டிய சந்திர பரிகார தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, திங்களூர் கைலாசநாதர் கோவில்.
இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு
பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம் (25.03.2024)
https://www.alayathuligal.com/blog/9csj4d2396kcbnwxprnrbe3zk4wcy9?rq