கும்பேஸ்வரர் கோவில்
கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன்
அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மன், விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் மந்திரிணி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.
கும்பேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை 'வளர் மங்கை' என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை 'மந்திரபீடேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.
கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.
கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.
ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.
தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, "கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி" என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.
சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
மதுரை மீனாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn