௳ (முகப்பு)

View Original

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

மாசி அமாவாசை மயானக் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு

பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.

ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

பிரார்த்தனை

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

See this map in the original post