௳ (முகப்பு)

View Original

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் திருவூடல் திருவிழா முதல், மறுநாள் நடைபெறும் மறுவூடல் திருவிழா வரை காணும் தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனைகள் வராது. குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால்தான் 'திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை? என்ற சொல் வழக்கில் வந்தது.

பிருங்கி முனிவர் என்பவர் தீவிர பக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டார். ஒருமுறை சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் கைலாயத்திற்கு சென்றார்.அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதியும் அமர்ந்து இருந்தார். இதைக்கண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வண்டு வடிவம் எடுத்து, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் புகுந்து மூன்று முறை சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தேவி என்னை கண்டு வணங்க பிரியமில்லாத உனக்கு, உடல் இயக்கத்திற்கு தேவையான, நான் அளிக்கும் சக்தி மட்டும் எதற்கு? அதை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றார். பிருங்கி முனிவரும் தன் உடல் சக்தியை பார்வதி தேவியிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். சக்தி இழந்து நின்ற பிருங்கி முனிவரிடம் சிவபெருமான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் தனக்கு மோட்சத்தை அருளுமாறு வேண்டினார்.

சிவபெருமான் அந்த வரத்தை பிருங்கி முனிவருக்கு கொடுக்க முற்பட்டபோது, பார்வதிதேவி அதனை தடுத்தார். ஆனால் சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளிக்க எண்ணினார். இதனால் சிவபெருமான் மீது பார்வதிதேவிக்கு ஊடல் ஏற்பட்டது. அதனால் அவர் சிவபெருமானைப் பிரிந்து ஆலயத்துக்குள் வந்து கதவை பூட்டிக் கொண்டார். சிவபெருமான் முதலில் பக்தனுக்கு வரத்தை அளித்துவிட்டு பின்னர் பார்வதி தேவியை சமாதானம் செய்யலாம் என்று எண்ணினார்.அதன்படி அன்றிரவு ஓரிடத்தில் தனியாக தங்கிய சிவபெருமான் மறுநாள் காலையில் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளித்தார். பின்னர் மாலையில் பார்வதிதேவியை சந்தித்து அவரது ஊடலை போக்கினார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் மாட்டுப்பொங்கலன்று திருவூடல் திருவிழா என்று நடத்தப்படுகிறது.

அன்று காலை இறைவனும், இறைவியும் மாடவீதிகளை மூன்று முறை வலம் வருவார் கள். அன்று மாலை திருவண்ணாமலை திருவூடல் தெருவில், சிவனும், பார்வ தியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோவிலுக்குள் சென்று விடுவார். அவரது சன்னிதி கதவுகள் மூடப்படும். இதையடுத்து அம்மனை, ஈசன் சமாதானம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார், அன்று இரவு அருகில் உள்ள குளன் கோவிலில் சென்று தங்குவார். மறுநாள் காலையில், அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே அண்ணாமலையார், தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் நடைபெறும். அதில் ஒன்று, திருவூடல் திருவிழா அன்று நடைபெறும் கிரிவலம் ஆகும். மாலையில் அண்ணாமலையார் ஆலயம் திரும்பி , அங்கு உண்ணாமுலையம்மனை சமரசம் செய்து ஊடலைத் தீர்த்தார். இறுதியில் அண்ணாமலையாரும். உண்ணாமுலையம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இப்படி காட்சி தருவதை மறுவூடல்' என்பர்கள்,

கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த திருவூடல் திருவிழா, வேறு எந்த சிவாலயத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறுவதில்லை.

சென்ற ஆண்டு மாட்டுப் பொங்கலன்று வெளியான பதிவு

திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்

https://www.alayathuligal.com/blog/dtkb7hmhczdtfzgwgdz88wc6pm57wf

See this map in the original post