௳ (முகப்பு)

View Original

ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்

திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருக்கும் 'ஆபரண தாரி' பெருமாள்

நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஆவராணி அனந்த நாராயண பெருமாள்கோவில். தாயார் திருநாமம் அலங்காரவல்லி. பஞ்ச நாராயணத் தலங்களில் இத்தலமும் ஒன்று.

திருவரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் 18 அடி நீள திருமேனியுடன், ஐந்து தலை ஆதிசேஷன் மேல் வானத்தைப் பார்த்தவண்ணம் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து கருவறையில், மூலவரான அனந்த நாராயண பெருமாள், தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில், ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, பக்தர்களை பார்த்த வண்ணம் சயனம் கொண்டுள்ளார். இந்த காட்சியை, இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். வேறு எந்த தலத்திலும்காண முடியாது.

சயன கோலத்தில் இருக்கும் அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.

இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவர் தலை முதல் கால் வரை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், அழகான நீண்ட காது வளையங்கள், திருமார்பில் நலங்கிளர் எனும் ஆரம், தண்டம், தாரணம், சிரேஷணம், கடகம் போன்ற ஆபரணங்கள், மார்பின் குறுக்கே கவசம், இடுப்பில் உத்தரியம், உடல் முழுவதும் யஜ்ஞோபவிதம், அவரது காலில் தண்டை, கொலுசு அணிந்தபடி காணப்படுகிறார். அவரது கைகளின் விரல்களிலும், கால்களின் கால்விரல்களிலும் ஒவ்வொரு மோதிரம் காணப்படுகிறது. இப்படி இத்தலத்துப் பெருமாள் திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருப்பதால், இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.

See this map in the original post