சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும். இந்த அம்மனின் மற்ற திருநாமங்கள் திருநிலைநாயகி, ஸ்திரநாயகி, பெரியநாயகி. எத்தகைய துன்பத்திலும் சிக்கலிலும் நம்மை நிலைகுலைய விடாமல், நமக்கு ஸ்திரதன்மையை தருபவர் என்று பொருள்.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர். 7-ம் நூற்றாண்டில் இந்த தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாக அவதரித்தவர். குழந்தை சம்பந்தருக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள், சிவபாத இருதயர் குழந்தை சம்பந்தருடன் இக்கோவில் பிரம்மதீர்த்தக் குளத்திற்கு நீராட வந்தார். குளக்கரையில் சம்பந்தரை விட்டுவிட்டு நீராடச் சென்றார். வெகு நேரமாகி தந்தை வராததாலும் பசியினாலும் குழந்தை சம்பந்தர் அழத் தொடங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் குழந்தையின் பசியாற்றும்படி உமாதேவியை பணித்தார். சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார்.
'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி, பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா, திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.