௳ (முகப்பு)

View Original

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்

அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்

தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.

சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.

ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி

பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும், அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. ஸ்ரீசக்கரத்தின் மீதே சன்னதி எழுப்பப்பட்ட தனிச்சிறப்புடைய கல்யாண காமாட்சி

https://www.alayathuligal.com/blog/k638faw98ataynlf9h5j4fd6r7g9ay

2. ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே சுயரூப காட்சி தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை

https://www.alayathuligal.com/blog/l7kwcle9djca9grwnr92es8xmm59lp

அந்தரத்தில் தொங்கும் அதிசய கல் தூண்

தூணிற்கும் அதன் அடித்தளத்திற்கும் இடையில் உள்ள 2 செ.மீ. இடைவெளி

மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்கள்

அம்மன் சன்னதியின் ஸ்ரீசக்கர வடிவ அடித்தளத்தை தாங்கி நிற்கும் யானை