நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேண்டியதை உடனுக்குடன் நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்
சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது, சுமார் 1400 வருடங்கள் பழமையான, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே 'நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்' என்று போற்றப்படுகிறார்.
கல்யாண லட்சுமி நரசிம்மர்
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் , லட்சுமி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலட்சுமி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரார்த்தனை
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
.நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.