௳ (முகப்பு)

View Original

கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில்

ஆண்டு முழுவதும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது தினமும் விழும் அதிசயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில், கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் . இறைவியின் திருநாமம் கோமதி. கொங்கு மண்டலத்தில், அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை அமைந்துள்ள 11 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

கொங்கு மண்டலத்திலேயே மிகப் பெரிய கருவறை விமானம் கொண்ட கோவில் இது. மேலும் மூலவர் அர்ச்சுனேசுவரர், மிகப்பெரிய அவுடையாருடன் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளி உள்ளார். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு தினமும், சூரியன் காலையில் உதித்ததும், சூரியனின் ஒளிக்கதிர்கள் அமராவதி ஆற்றின் தண்ணீரில் பட்டு, மூலவர் அர்ச்சுனேசுவரரின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும். இந்த சூரிய ஒளியானது, ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை ராஜகோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட, அதாவது ஆண்டு முழுவதும், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம், கோவிலை வடிவமைத்து இருப்பது, சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும். இந்த அதிசய நிகழ்வை காண, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இத்தல இறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.

See this map in the original post