ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்
ஓலைச்சுவடியில் வேதத்தை வாசிக்கும் அனுமனுக்கு அதன் பொருளை விளக்கும் ராமர்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் - பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்.
இந்தக் கோவிலில், ஸ்ரீராமபிரான் யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இப்படி யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் இருக்கும் ராமரை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ள படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக ராமரை நாம் தரிசிக்கலாம்.
கருவறையில் ஸ்ரீராமபிரான் யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி வீற்றிக்கிறார், அவருக்கு இடதுபுறம் தம்பி லட்சுமணர் வில்லேந்திய கோலத்தில் நின்றருள, வலது பக்கம் சீதா பிராட்டி அமர்ந்து திருவருள் புரிகின்றாள். ரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ ராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும்.
கருவறையின் எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்ம மகரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். அனுமனின் இந்த கோலத்தின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. ஸ்ரீராமபிரான், ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இப்பகுதியில் வரும்போது சுகபிரம்ம மகரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற ஸ்ரீராமபிரான் அனுமனுக்கு, உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோலத்தையே, இந்தக் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஸ்ரீராமரை சேவித்து கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண வரம் கிட்டும். ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடைவை மற்றும் மங்கலப் பொருட்களை தானம் தந்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்டிச் செல்ல, ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஆடிப்பெருக்கு விழா பற்றிய முந்தைய பதிவு
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா (03.08.2023)
https://www.alayathuligal.com/blog/pexj8gxnha5eax8kclpsg3e8jwsks2