சாட்சி கணபதி கோவில்
பக்தர்களைப் பற்றி சிவபெருமானிடம் சாட்சி சொல்லும் கணபதி
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோவிலுக்குச் சென்று மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பிகா தேவியை தரிசித்ததாக இவர் கைலாயத்தில் சாட்சி சொல்வாராம். அதனால், இவரை 'சாட்சி கணபதி' என்கின்றனர்.
இந்த சாட்சி கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பாராம். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி இக்கணபதியை தரிசித்து தமது கோத்திரப் பெயர்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயிலில் நுழைகின்றனர். இக்கணபதி விக்ரகம், பெயர்களை குறித்துக் கொள்ளும் தோற்றத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு இருப்பது ஒர் அற்புதம் ஆகும்.