மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில்
துர்க்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் அம்மன்
வித்தியாசமாக அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி தரும் மாரியம்மன்
மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர் மாரியம்மன் கோவில். மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் வண்டியூர் மாரியம்மன்தான். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு, அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன்பு, முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், இவளை, 'துர்க்கை'யாக பாவித்து வணங்கினர். மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூஜைகள் செய்து வணங்கினர். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன். துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, 'மாரியம்மன்' என்ற பெயரே நிலைத்து விட்டது.
இத்தலத்து அம்மன், துர்கையாகவும் மாரியம்மனாகவும் சேர்ந்தே தரிசனம் தருகிறார். கருவறையில், பிற அம்மன் கோவில்களில் இல்லாத விதமாக மாரியம்மன், தனது வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில், இடது காலை மகிஷாசுரன் தலைமேல் வைத்து உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள். கையில் பாசம், அங்குசம் ஏந்தி அம்பாள் சிரித்த கோலத்தில், காட்சி தருகிறாள். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே, மகிஷாசுரன் இருக்கிறான். மூலவராக மாரியம்மன் இருப்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.
பிரார்த்தனை
இத்தலத்தில் தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்ததை , மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் எடுத்துத் வைக்கிறார்கள். கண்நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி, தீர்த்தம் வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம். தோல் வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்து மாரியம்மனை வணங்கிட, சகல சௌபாக்கியங்களும் பெருகி, குடும்ப பிரச்னைகளும், தொழில் பிரச்னைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும். சுற்றியிருக்கும் ஊர் மக்கள்கூட, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த அம்மனைதான் வேண்டிக்கொள்கிறார்கள். அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் இங்கு எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
பால்குடம், தீச்சட்டி எடுத்தல், கண்மலர் காணிக்கை, அம்மனின் உருவப் பொம்மைகள் வாங்கி வைத்தல், பானை முழுவதும் மையினால் புள்ளி வைக்கப்பட்ட பானை கொண்டுவருதல் (இதற்கு ஆயிரம் கண் பானை என்று பெயர்), மாவிளக்கு போன்ற பல நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பூச்சொரிதல் விழாவும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தெப்பக்குளம்
திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மகால் கட்டிய போது, அதன் கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணலை தற்போது அம்மன் அருட்காட்சி தரும் கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள பகுதியில் இருந்து தோண்டி எடுத்துகட்டினார். மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார். கோவிலுடன் சேர்ந்துள்ள தெப்பக்குளம், மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் எனும் பெருமையினை உடையது.