சனி மகா பிரதோஷம்
சனி மகா பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்
மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். வழக்கமாக ஒரு மாதத்தில் வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு பிரதோஷங்கள் வரும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனமாடி தேவர்களுக்கு சிவப் பெருமான் காட்சி கொடுத்து, அருள் செய்த காலம் தான் பிரதோஷ காலமாகும்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாகி தேவர்களையும் உலக உயிர்களையும் காத்தருளினார். அவர் பதினொன்றாம் பிறையாகிய ஏகாதசியில் விஷம் உண்டார். பன்னிரண்டாம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். பதிமூன்றாம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். இதனால்தான் சனி பிரதோஷம், சனி மகா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணமும்,, மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறும்.
ஒரு சனிப் பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமமானது. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை, வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்களுக்கு சனியினால் வரும் துன்பங்கள், சனி பிரதோஷ வழிபாட்டால் விலகும். சனி பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்றால் 120 வருடம் பிரதோஷத்திற்குக் கோவிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம் என்னும் நூல். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.