௳ (முகப்பு)

View Original

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்

வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.

திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.

கந்தசஷ்டி விழா

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி விழா முதல் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்

 1. திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா (25.10.2022)    https://www.alayathuligal.com/blog/prshzzznsng2mdsp84ldpal3wmznja

 2. திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு (04.11.2021)     https://www.alayathuligal.com/blog/f2mfw7jgfymnjwlsgtysg9y23rg436

See this map in the original post