௳ (முகப்பு)

View Original

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்

நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம்

திருவள்ளூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேஸ்வரர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி. மார்கழி திருவாதிரை தரிசனம் சிறப்பாக நடைபெறும் தலங்களில் திருவாலங்காடும் ஒன்றாகும்.

வடாரண்யேஸ்வரர் கோவில், நித்தமும் நடமாடும் நடராஜ பெருமானுக்கு உரிய ஐம்பெரும் அம்பலங்களில் முதல் தலமாக, இரத்தின சபையாகத் திகழ்கிறது. அதனால் இத்தலத்தில், நடராஜப்பெருமானுக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜப் பெருமானின் திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் நடராஜப்பெருமானுக்கு அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன.

பொதுவாக பெருமாள் கோயில்களில் தீர்த்தம் பிரசாதமாக தருவார்கள். ஆனால் இத்தலத்து நடராஜப் பெருமானின் சன்னதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது, இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் நடராஜப் பெருமான் தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்கம் அடைந்தனர்.அவர்களது மயக்கத்தை தெளிவிக்க நடராஜப்பெருமான் கங்கை நீரை அவர்கள் மீது தெளித்தார். அதன் அடிப்படையில், இங்கு தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜப் பெருமானின் திருவுருவம் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு என்கின்றனர்.

காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.

ஒருமுறை காளிக்கும், சிவபெருமானுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது.

நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்பும் அன்பர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் இத்திருத்தலமாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காளியை வழிபாடு செய்த பின்னர் மூலவரை வழிபட்டால் முழுப்பயணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவாலங்காடு நடராஜர் திருவாதிரை அபிஷேகம் காணொளிக் காட்சி

இந்திய தேசத்தின் வரைபடம் போல் அமைந்திருக்கும் நடராஜப் பெருமானின் திருவுருவம்

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் பற்றிய முந்தைய பதிவு

“கடலில் கிடைத்த மரகதப் பாறை”

இப்பதிவில் “உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் திருவாதிரை அபிஷேக காணொளிக் காட்சி” இணைக்கப்பட்டுள்ளது.

பதிவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.alayathuligal.com/blog/2rftxr9hbxkpjlhzxfx6j39wpe73td

See this map in the original post