கோட்டை வாசல் விநாயகர் கோவில்
கோவிலை இடிக்க உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரியை மிரட்டிய விநாயகர்
ராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது கோட்டை வாசல் விநாயகர் கோவில். மிகவும் பழமை வாய்ந்தது இக்கோவில். இத்தலத்து விநாயகர் ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமநாதபுரம் மன்னர்கள் எந்தவொரு முக்கிய செயலையும் இவரை பூஜை செய்தபின்தான் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கருவறையில் கோட்டை வாசல் விநாயகர் வல்லபையை தமது மடியில் இருத்தி கொண்டு நமக்குக் காட்சி தருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோட்டை வாசல் பிள்ளையாருக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இக்கோயிலிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அந்த கோட்டை வாசல் விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.
அன்று இரவே ஆங்கிலேய அதிகாரியின் உறக்கத்தின் பொழுது, கனவில் யானை உருவத்தில் கோட்டை வாசல் விநாயகர் தோன்றி ஏறி மிதிப்பது போல மிரட்டி உள்ளாராம். விடியற்காலையில் ஆங்கில அதிகாரி கோவிலை இடிக்கும் உத்தரவை நிறுத்தி உள்ளார்.
தெய்வ சக்தியை உணர்ந்த அந்த அதிகாரி, தன் தவறை உணர்ந்து கோவிலுக்கு வந்து கோட்டை வாசல் விநாயகரை வணங்கி மன்னிப்பும் கேட்டுச் சென்றாராம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த ஆலயத்தை அரண்மனைக்கு எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பது வரலாறு.
இவரை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை இவர் நிறைவேற்றித் தருவதால், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிதறு தேங்காய் போடுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.