திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. சுவாமி கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கும் அபூர்வ வடிவமைப்பு (20.09.2024)
https://www.alayathuligal.com/blog/nedunkalam20092024
2. திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன் (09.09.2024)
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
https://www.alayathuligal.com/blog/nedunkalam09092024
3. சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள் (28.08.2021)
https://www.alayathuligal.com/blog/jfptwler79pyfaltednrhpa4xrybdp?rq