திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.
இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.
இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.
வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள் (28.08.2021)
https://www.alayathuligal.com/blog/jfptwler79pyfaltednrhpa4xrybdp?rq