சின்னமனூர் லட்சுமிநாராயணர் கோவில்
வயிற்று வலி தீர்க்கும் பெருமாள் திருமஞ்சனத் துண்டு
தேனியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது லட்சுமிநாராயணர் கோவில். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
குருவாயூரப்பன் தோற்றத்தில் பெருமாள்
ஒரு சமயம் சேர மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, 'லட்சுமி நாராயணர்' என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.
கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், கழுத்தில் சாளக்கிராம மாலையும், நான்கு திருக்கரங்களில் சங்கு சக்கரமும், அபய ஹஸ்தத்துடன் தான ஹஸ்தமும் திகழக் காட்சி தருகிறார். பெருமாள், குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள்.
பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு
ஒரு சமயம் இக்கோவிலில், ஆஞசநேயருக்கு தனிச் சன்னதி அமைத்து அதில் அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய முற்பட்டார்கள். அப்போது ஆஞ்சநேயரைத் தன் அருகிலேயே பிரதிஷ்டை செய்து விடும்படி பெருமாள் ஒரு பக்தரின் மூலம் உத்திரவிட்டாராம். பொதுவாக ராமபிரானுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், இங்கு பெருமாளுடன் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும்.
வயிற்று வலி தீர பெருமாளுக்கு திருமஞ்சனம்
வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், வயிற்று வலி நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.
தீராத நோய் மற்றும் அடிக்கடி உடல் வலி வந்து அவதிப்படும் பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளின் திருப்பாதத்தில் 9 மிளகுகளை வைத்து வழிபட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தினமும் ஒன்று வீதம் சாப்பிட, தீராத நோயும் தீரும்; உடல் வலி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.