௳ (முகப்பு)

View Original

காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

சிவபெருமான், நாக ராஜா கார்கோடகனை தன் கழுத்தில் அணிந்த தலம்

தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காமரசவல்லி. இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், கார்கோடேஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகா.

அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பாண்டவ வம்சத்து பரீட்சித்து மகாராஜா சாபம் ஒன்றினால் பாம்பு கடித்து இறக்க, அவர் மகன் ஜனமேஜயன் பூமியில் உள்ள அனைத்து பாம்புகளும் இறக்க யாகம் வளர்த்தான். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் என்னும் நாகம் ,இத்தலத்து இறைவனை வழிபட்டு யாகத்திலிருந்து தப்பியது. கார்கோடகனின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவனிடம், இத்தலத்துக்கு வந்து தொழுவோருக்குப் பாம்பு கடித்து மரணம் ஏற்படக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினார். சர்ப்ப தோஷம் அவர்களைத் தீண்டாதிருக்க வேண்டும் என்றும் எச்சரித்து, கார்கோடகனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அத்தினமே கடக ராசி, கடக லக்னத்தில் அமைந்த அற்புதமான தினமாகும். செளந்தரேஸ்வரர் என வழங்கப்பட்ட இறைவன், அத்தினம் முதல் கார்கோடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சை கிடைத்த தலம்

தன் கணவன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதால், ரதிதேவி தனக்கு மாங்கல்ய பிச்சை வேண்டி தவமிருந்த தலம். அதனால் ரதிவரம் என்றழைக்கப்பட்டது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரி்ல் ஒவ்வொருஆண்டும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எட்டு நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இன்றளவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடக ராசிக்காரர்கள், நாகதோஷம் உடையவர்கள் வழிபடவேண்டிய கோவில்

செளந்தரேஸ்வரர் வாக்குப்படி 'இந்த காமரசவல்லி பகுதியில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை' என்கின்றனர் ஊர்மக்கள். இந்த வரத்தை சிவபெருமான் தந்த நாள் கடகராசி, கடக லக்னம் அமைந்த தினம் என்பதால் கடகராசிக்காரர்கள், கடக லக்னக்காரர்கள் இந்தத் தலத்துக்கு வந்து செளந்தரேஸ்வரரை தரிசனம் செய்வது சிறப்பு. அவர்களது கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

படங்கள் உதவி : திரு. ரகுநாதன், காமரசவல்லி

See this map in the original post