நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்
நந்தி தேவர் வழிபட்ட பெருமாள் கோவில்
கும்பகோணத்தில் இருந்து ஐந்து கிமீ தொலைவில், மருதாநல்லூர் அருகில் அமைந்துள்ளது நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் நந்திநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கவிஞர் காளமேகப் புலவர் இக்கோவிலில் வழிபட்டார்.
சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்குத் தீர்வு காணும் பொருட்டு விஷ்ணுவை வழிபட நந்தி தேவர் இங்கு வந்தார். நந்தி தேவர் விஷ்ணுவிடம் இங்கேயே தங்கி தனது (நந்தியின்) பெயரை விஷ்ணுவின் சொந்த பெயரின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினார். எனவே இத்தலத்து பெருமாள் நந்தி நாத பெருமாள் என்று பெயர் பெற்றார். இந்த இடத்திற்கு நந்திவனம் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்தியாவட்டை பூ முதலில் தோன்றிய தலம்
இங்குள்ள நந்திநாதப் பெருமாளுக்கு, நந்தி தேவர் விண்ணுலகின் நந்திமணி மலரால் பூஜை செய்தார். இந்தப் பூ பூமியில் நிலைத்திருந்து, இன்று தமிழில் 'நந்தியாவட்டை' (பின்வீல் பூ) என்று அழைக்கப்படுகிறது.