முத்துமலை முருகன் கோவில்
முருகப்பெருமானின் தலைக்கிரீடத்திலிருந்து முத்து விழுந்த மலை
கோவைக்கும், பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் முத்துகவுண்டனூரில் உள்ளது, முத்துமலை முருகன் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.
முருகப்பெருமான் தனது வாகனமான மயிலின் மீது உலகைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கிரீடத்திலிருந்து ஒரு முத்து விழுந்தது. முருகன் அந்தமுத்துவைத் தேடியபோது, அது இந்த மலையின் மீது விழுந்திருந்தது. முருகப்பெருமான் அதை மீட்க இம்மலையின் மீது கால் வைத்தார். முருகனின் முத்து இம்மலையில் விழுந்ததால், இந்த மலை முத்துமலை என்று அழைக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, முருகப்பெருமான் ஒரு உள்ளூர் பெண்ணின் கனவில் வந்து, மூன்று காரைச் செடிகளின் (காட்டு மல்லிகை) வரிசையின் கீழ் புதைந்து இருப்பதாகக் கூறினார். இதை அந்தப் பெண் உள்ளூர் பெரியவர்களிடம் கூறியபோது, யாரும் நம்பவில்லை. தொடர்ந்து மூன்று கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திர நாட்களில் அவள் கனவில் முருகன் மீண்டும் தோன்றினார். அந்தப் பெண் முருகனை தேடிச் சென்றபோது, மூன்று காரைச் செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஊர் பெரியவர்கள் அவளை நம்பி, அந்த இடத்தில் ஒரு வேல் (ஈட்டி) நிறுவி, அதை முருகனின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். பின்னர் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தலத்தில் நாகர் சன்னதி அமைந்துள்ளது. அதனால் நாக தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் இத்தலத்தில் நடத்தப்படுகின்றது. கோவிலுக்கு அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. இந்த எறும்புப் புற்றிலிருந்து இரவு நேரங்களில் ஒரு ஒளி வெளிப்படுகிறது. இந்த ஒளியை பல பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஒளிர்விற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.