௳ (முகப்பு)

View Original

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி அம்மன்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில், பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில். அன்னபூரணி என்றாலே அன்னத்தை பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணியை தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டு திரும்பி செல்ல முடியாது. கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்கு கூட பசும்பால் தரப்படுகிறது.

கருவறையில் அன்னபூர்ணேசுவரி தங்கத்தாலான திருமேனி உடையவளாய், நான்கு கரங்களுடன் பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அன்னையின் மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. அபய முத்திரையுடன் விளங்கும் அன்னையின் வலது கீழ் கையில் காயத்ரி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வரத முத்திரை தாங்கி நிற்கும் இடது கீழ் கையில் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

பார்வதிதேவி அன்னபூரணியாக அவதரித்த வரலாறு

ஒரு முறை, சிவபெருமானுக்கும்,பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்க தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவு பொருட்கள் ஏதும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்க பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தை போக்கி அருள்பாலித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டாள் என்பது வரலாற்று கதை.

இந்த அன்னபூர்ணேசுவரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்கு தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியை கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாக தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை. அன்னபூர்ணேசுவரியை வணங்குபவர்களுக்கு,'அன்னதோஷம்' என்னும் வறுமை அணுகவே அணுகாது.

நவராத்திரி ஏழாம் நாளன்று வெளியான முந்தைய பதிவுகள்

1. தையல்நாயகி அம்மன் (02.10.2022)

    https://www.alayathuligal.com/blog/gchp68lgler8gnn79yt582zf62s6wr

 

2. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் (12.10.2021)

     https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி மங்கள ஆரத்தி

See this map in the original post