௳ (முகப்பு)

View Original

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இசை தூண்கள்

திருநெல்வேலி தேவாரப்பாடல் பெற்ற 14 பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.

நம் தமிழகத்தில் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் விஞ்ஞானிகளாலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அதிசயமான இசைத் தூண்களைக் கொண்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், ஆழ்வார் திருநகரி, திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களில் இசைத் தூண்கள் உள்ளன. இருந்தாலும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத்தூண்கள் தனித்துவமானவை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண்கள், உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தூண்களில் இருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்றும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசை தூண்கள் உள்ளன. ஒரு பெரிய தூணை சுற்றிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இந்த தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

​எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர். ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும். ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

அன்னம் பரிமாறும் காந்திமதி அம்மன்

https://www.alayathuligal.com/blog/gfkkfl2x49gxrpdfg2lhzla3rj7kj5

See this map in the original post