௳ (முகப்பு)

View Original

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்

சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியாமல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.

மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்

அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

நவ வியாகரணக் கல்

See this map in the original post