௳ (முகப்பு)

View Original

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

சிவபெருமான் அப்பர், சம்பந்தருக்கு படிக்காசு அளித்த தலம்

கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில், தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. தல விருட்சம் வீழிச் செடி. அதனால் தான் திருவீழிமிழலை என்று தலத்துக்குப் பெயர்.

மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி, வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரர்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். இருவரும் தினமும், ஐந்நூற்று மறையவர்களுக்கும், மற்ற அடியார்களுக்கும் உணவு படைத்து வந்தனர். சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்), மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன. அப்பொழுது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் அடியாருக்கு உணவு படைப்பது எப்படி என்று இருவரும் கவலை உற்றனர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் அடியவர்களுக்கு உணவு படைக்கலாம் என்று கூறி மறைந்தார்.

கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் மறுநாள் காலையில் திருவீழிமிழலை கோவிலுக்கு சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப்பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். தங்கள் மடத்துப் பணியாளர்களிடம் அக்காசுகளைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அடியவர்களுக்கு உணவு அளித்திடுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி, இரண்டு மடத்து அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள்.

சில நாட்கள் சென்றன. திருநாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, சமையல் பணியாளர்களை நோக்கி, 'உணவு படைப்பதில் ஏன் காலதாமதம்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், சிவபெருமான் கொடுத்த பொற்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே பொருட்கள் கொடுக்கிறார்கள். நாவுக்கரசருக்கு கிடைக்கும் காசு நல்ல காசாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் பெற்று வரும் காசு மாற்று குறைந்த காசாக இருக்கின்றது. அதனால் நீங்கள் பெற்ற பொற்காசு கொடுத்து நாங்கள் பண்டம் வாங்க சென்றால், நம்முடைய காசுக்கு வட்டங் (தரகு, கமிஷன்) கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால் தான் காலதாமதம் என்று கூறினர். மறுதினம் திருவீழிமிழலை கோவிலுக்குச் சென்ற சம்பந்தர்,

"வாசிதீரவே காசுநல்குவீர்

மாசின் மிழலையீர், ஏசலில்லையே

காழி மாநகர் வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே''

என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர் சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கும் நற்காசு வழங்கினார். அதுமுதல் காலத்தோடு அவருடைய அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. நாட்டில் பஞ்சம் அகன்றது.

இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி (19.06.2024)

https://www.alayathuligal.com/blog/mex52bke3xml6jypxey6ff9p88fpd7

2. வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்         (28.11.2022)

   https://www.alayathuligal.com/blog/gehtfgpl646ybf5g8hhrbfpyw8mbm5?rq

3. திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு (10.07.2021)

    https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

உற்சவ மூர்த்தி மாப்பிள்ளை சுவாமி

See this map in the original post