மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அப்படி நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும். எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது. எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவபெருமானுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.
சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும். ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை
சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில், பெருமழை பெய்து, வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது. வைகை ஆற்றின் கரைகளை , பலப்படுத்த மக்களுக்கு பாண்டிய மன்னன் கட்டளை இட்டார். மன்னனின் கட்டளைப்படி, இப்பணி பகிர்ந்தளிக்கப்பட்டது. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி ஒருவருக்கும், வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியை பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. சிவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே, சிவபெருமான் கூலிக்காரன் வடிவில் வந்தார். கூலி தர, தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறினார். உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை, தான் செய்வதாக கூறி, பிட்டு உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.
கூலியாள் வடிவில் இருந்த சிவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்து துாங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த, பாண்டிய மன்னன் கூலியாளை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார்.சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான்.
உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க திருவாதவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும். அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்படுவர்.