௳ (முகப்பு)

View Original

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்

இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்

தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, 'அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.

கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.

இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

படங்கள் உதவி: பாலகிருஷ்ணன் பட்டாச்சாரியார், கடையநல்லூர்

இரட்டை சிம்ம வாகனத்தில் சக்கரத்தாழ்வார்

நாகத்தின் மேல் நரசிம்மர்

See this map in the original post