௳ (முகப்பு)

View Original

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்

மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று  'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி  திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

 

ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு  தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.

திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு

திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில்  சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை  தரிசிப்பது விசேஷமாகும்.  திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.

சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை.  இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.

 சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார்.   வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.

இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.

அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13  திருப்பல்லாண்டு பாடல்களை  பாடினார். உடனே, தேர் அசைந்தோடி  சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.

 இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி  என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.

எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.