௳ (முகப்பு)

View Original

யோக நரசிம்மர் கோவில்

கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்

சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்.
வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். அசலம் என்றால் மலை என்று பொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன.
திருமால் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக, திருமால் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது.
சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான சோளிங்கர் மலையின் மீது கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். அவர் வருடத்தில் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷம்.இவ்விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் என்னும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது. இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை, வியாபார நஷ்டம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படும்.

See this map in the original post