௳ (முகப்பு)

View Original

தைப்பூசத் திருநாளின் சிறப்புகள்

தைப்பூசத் திருநாளின் சிறப்புகள்

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளை தைப்பூச திருநாளாக முருக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். தைப்பூச நன்னாளின் சில சிறப்புகளை இப்பதிவில் நாம் காணலாம்.

- ஆன்மிகத்தில் பொதுவாக 9, 18, 7 போன்ற எண்கள் பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாகிய தை மாதமும், 27 நட்சத்திரங்களில் 8 வது நட்சத்திரமாகிய பூசமும் சேர்ந்து வருவது இந்த தைப்பூசத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.

- ஒரு கல்பத்தில் (பிரம்மாவின் பகல் நேரத்தில்) தைப்பூச தினத்தில்தான், உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான றிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதிகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது.

- சூரபத்மனை அழிக்க கிளம்பிய முருகபெருமானுக்கு, பராசக்தி தன்னுடைய சக்தி வேலை கொடுத்த தினம் தைப்பூசம்.

- தைப்பூசம்அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டார்.

- முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால், ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.

- சிவபெருமான் வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்களுக்கும் தனது ஆனந்த திருநடனத்தை காட்டு அருளியது தைப்பூச நன்னாளில் தான்.

- தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.

- ஜோதிடத்தில் மங்களகாரகன் என குறிப்பிடப்படும் குரு பகவான் அவதரித்தது இந்த நாளில் தான்.

- ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.

- ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு, தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார்.

- முருகப் பெருமான் அனைத்து தெய்வங்களின் அம்சமாக திகழக் கூடியவர் என்பதாலேயே இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பால் குடம் எடுத்து வந்தும், காவடி ஏந்தி வந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக வந்து முருகனை பக்தர்கள் வழிபடுவார்கள். முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக, நடந்து செல்வதால் தீராத வினையும் தீரும் என்பது நம்பிக்கை. பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என காவடிகள் சுமந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் இந்த தைப்பூசத்திருநாளில் செலுத்துவது வழக்கம். அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து வணங்குவது வழக்கம்.

- தைப்பூசத்தன்று விரதமிருந்து, மனமுருகி முருகனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தைப்பூசத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் திருமண தடை விலகும், குழந்தைப்பேறு கிடைக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், வறுமை ஒழியும், வளமான வாழ்க்கை அமையும், பகை ஒழியும், நினைத்த காரியம் நிறைவேறும்.