மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்
புற்றுநோய்க்கு மருந்தாகும் அபிஷேகப் பால்
கும்பகோணம் அணைக்கரை சாலையில் அமைந்துள்ள திருப்பனந்தாள் என்னும் தேவாரத் தலத்திலிருந்து, தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மணிக்குடி கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகன் நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது.
ஒரு சமயம் சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜப் பெருமானுக்கும், காளி தேவிக்கும் நடனப் போட்டி ஏற்பட்டது. நடராஜப் பெருமான் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, அவரது கால் சிலம்பிலிருந்து ஒரு மரகதப் பச்சை மணி தெறித்து ஓடியது. அந்த மரகத பச்சை மணி விழுந்த இடம் தான் மணிக்குடி. விழுந்த மரகதப்பச்சை மணி சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த சுயம்பு லிங்கத் திருமேனியின் திருநாமம் தான் பஞ்சவர்ணேஸ்வரர். தான் சுயம்புவாக உருவாகி இருப்பதை சிவபெருமான் தேவர்களுக்கு அசரீரி மூலம் உணர்த்தினார். மேலும் அவர்களுக்கு ஐந்து வண்ணங்களோடு காட்சி தந்தார். இத்தலத்தில் விஷ்ணு ஏற்படுத்திய விஷ்ணு தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரருக்கு காலை, மாலை இரு வேளையும் செய்யப்படும் பசும்பால் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி அபிஷேகம் செய்து, அந்தப் பாலை சிறிது பிரசாதமாக உட்கொண்டால், கேன்சர் என்று சொல்லப்படும் புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறையும். அதுமட்டுமல்ல, எத்தகைய தீராத நோயால் அவதிப்படுபவர்களும் மணிக்குடி கிராமத்திற்கு வந்து இத்தல இறைவனுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக பருகினால், அவர்களது நோயும் குணமாகிவிடும். இப்படி அபிஷேகப் பால், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இதனால் ஏராளமான பக்தர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வந்து தங்கி, அபிஷேக பாலை பருகி தங்கள் புற்று நோயையும் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தீராத நோய்களையும் குணமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.