௳ (முகப்பு)

View Original

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. தேவர்களுக்கு பரப்பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்ததால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீஞானாம்பிகை என்ற திருநாமம் உணடாயிற்று.

கீழமங்கலம் கோவிலில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை வர, அபய கைகளுடன் சூட்சுமத்தில் வலது கையில் தாமரை மலர், இடது கையில் நீலோற்பலம் மலருடன், ஜடாமகுடத்துடன், சமமான சந்திரகலையுடன், மூன்று கண்களுடன், பத்மத்தின் மேல் நின்ற கோலத்தில் அருட்காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நீலோற்பலம் மலர் என்பது ஒரு வகை தாமரையை சேர்ந்தது. இம்மலர் இரவில்தான் மலரும். அம்பிகை ஒரு கையில் நீலோற்பலம் வைத்திருப்பது, அம்பிகை இரவில் சூட்சுமமாக சிவபெருமானை பூஜிப்பதையே உணர்த்துகிறது. பகவானுடைய வலது கண் சூரியன், இடது கண் சந்திரனின் அம்சமாகும். அதனால்தான் சூரியனால் தாமரையும், சந்திரனால் நீலோற்பலமும் (நீல நிறத்தாமரையும்) மலர்கின்றன. நீலோற்பலத்திற்கு ஒரு வருடம் வரை நிர்மால்ய தோஷம் கிடையாது. துளசி, வில்வத்திற்கு கூட 6 மாதம்தான் நிர்மால்ய தோஷம் கிடையாது. எனவே நீலோற்பலம் மிகச் சிறந்தது.

.திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்து கொண்டும், வரமும், அபயமும் எப்போதும் வழங்குவேன் என்று வர, அபய முத்திரைகளுடன் காட்சி கொடுத்து, அருள் பாலிக்கிறாள்.

ஸ்ரீ ஞானாம்பிகை சூடியிருக்கும் சந்திரன் மூன்றாம்பிறைச் சந்திரன் ஆகும். அதாவது 'சம கலை சந்திரன்'. இது கோணலான பிறைச் சந்திரன் கிடையாது. ஸ்ரீ ஞானம்பிகைக்கே உள்ள அதிவிசேஷம் இது. 'சம கலை சந்திரனைச்' சூடிய அம்பிகை என்பதால், 'என்னால் அழிவு கிடையாது. ஆக்கமும் ஆற்றலும் மட்டுமே. ஞானத்திற்கு என்றுமே அழிவு கிடையாது' என்பதையே வலியுறுத்துகிறாள்.

இந்த அம்பிகையை தரிசனம் செய்தவர்கள் , மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு பக்தர்களை மெய் மறக்கச் செய்யும், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யத் தூண்டும் அளவிற்கு ஞான வசீகரத் தோற்றம் உடையவள் ஸ்ரீஞானாம்பிகை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

படங்கள் உதவி : திரு. குமரகுருபரன் அர்ச்சகர், கீழமங்கலம்

ஸ்ரீஞானாம்பிகை

காளஹஸ்தீஸ்வரர்

See this map in the original post