௳ (முகப்பு)

View Original

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில்

11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சபை

திருவள்ளூலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பாசூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சிறப்பினை உடையது. 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருத்தலம் இரண்டாம் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனுக்கு அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம் இது என்கிறது கோயில் தலபுராணம்.

இந்தக் கோவிலின் கருவறையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாய் சதுர வடிவ ஆவுடையாரோடு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமான் சந்நிதிக்கு வலப்புறமாக அம்பாள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் என ஒரே வரிசையில் சிவபெருமான் குடும்ப சமேதராக காட்சி அருள்கிறார்.

பிரச்னைகள் தீர்க்கும் மாலைப் பிரார்த்தனை

இங்கு சிறப்பு அம்சமாக ஒரு சந்நிதியில் 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. இந்த விநாயகர்களுக்குத் தேங்காய் மாலை , வாழைப்பழம், அருகம்புல் மாலை ஆகியன சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வழி செய்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கல்யாண தடை, குழந்தையின்மை, குடும்பச் சிக்கல்கள் முதலிய பிரச்னைகளுக்கு 11 நெய் தீபம் ஏற்றி 11 தேங்காயை மாலை, 11 வாழைப்பழ மாலை, அருகம்புல் மாலை ஆகியனவற்றை இங்குள்ள விநாயகருக்கு சாத்தி வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது நம்பிக்கை.

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய சிவபெருமான்

திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன் பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

See this map in the original post