௳ (முகப்பு)

View Original

வன்னிக்காடு அகத்தீசுவரர் கோவில்

ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் அபூர்வ தோற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னி வேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.

இத்தலத்து மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார். அகத்தியர் அமைத்த லிங்கம் என்பதால் லிங்கம் குள்ளமாக இருக்கிறது.

அம்பாள் புவனேசுவரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று, தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பௌர்ணமியன்று அம்பிகைக்கு நடைபெறும் லகுசண்டி ஹோமம்

பௌர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் அம்பாளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கலசத்திலிருந்து நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்வதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது ஏழு இலைகளில் சப்த ரிஷிகளுக்கும் நைவேத்யம் படைப்பார்கள்.

பௌர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள்.