௳ (முகப்பு)

View Original

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்

நூறு கண்கள் கொண்ட துர்க்காதேவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில். இத்தலம், முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். பிரம்மராயன் கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.

இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால், இத்தலத்து புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.

நினைத்த காரியம் நிறைவேற, சகல சௌபாக்கியங்களும் கிட்ட துர்க்கைக்கு திரிசதி அர்ச்சனை

இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

பிரார்த்தனை

துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம். திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

See this map in the original post