௳ (முகப்பு)

View Original

சமயபுரம் மாரியம்மன் கோவில்

ஆங்கிலேய படைத்தளபதி சுட்ட தோட்டாக்களைப் பூக்களாக ஏற்றுக் கொண்ட சமயபுரம் மாரியம்மன்

பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி நகரை கைப்பற்றுவதில் பிரஞ்ச் படைகளுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகளுக்கு ராபர்ட் கிளைவ் தலைமை ஏற்று நடத்தினார். ராபர்ட் கிளைவ் தலைமையின்கீழ் டால்டன், லாரன்ஸ், ஜின் ஜின் என்ற தளபதிகள் பணியாற்றினர். ஆங்கிலப் படை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை சமயபுரத்தில் ஒரு கொட்டகை அமைத்து பாதுகாத்தனர். அதனால் இரவு நேரத்தில், ஊர் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது ராபர்ட் கிளைவ் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின் ஜின், நள்ளிரவில் ஆயுதக் கிடங்கை பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான்.

அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஜின் ஜின் நிற்குமாறு கட்டளையிட்டான். ஆனால், அந்தப் பெண்ணோ நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். உடனே அந்தப் பெண்ணை நோக்கி தன் கைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் ! அவன் கை துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் எல்லாம் பூக்களாக மாறி அந்தப் பெண்ணின் தலை மீது விழுந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர் மக்கள்,'நீங்கள் சுட்டது எங்கள் தெய்வம் சமயபுரம் மாரியம்மனைத்தான். நீங்கள் பெரிய தெய்வ குற்றத்தை இழைத்து விட்டீர்கள்' என்றார்கள்.அதற்கு ஜின் ஜின், ' வந்தது உங்கள் தெய்வம் மாரியம்மன் என்றால் கோவிலுக்குள் இப்போது அந்த தெய்வம் இருக்க முடியாது. வாருங்கள் கோவிலுக்குள் சென்று பார்ப்போம்' என்று ஊர் மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான். அப்போது கருவறையில் அம்மனின் உருவத்தைக் காண முடியவில்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. அதன்பின்னர் மக்களால் அம்மன் உருவத்தைப் பார்க்க முடிந்தது. மக்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மனை விழுந்து வணங்கினார்கள். தளபதி ஜின் ஜினுக்கு உடனே கண் பார்வை பறி போனது. பின்னர் ஊர் மக்களின் அறிவுரையை கேட்டு, ராபர்ட் கிளைவும், ஜின் ஜினும் சமயபுரம் மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வணங்கினர். மூன்று நாள் கழித்து தளபதி ஜின் ஜினுக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்தது. ராபர்ட் கிளைவிற்கு அம்மை நோயும் நீங்கியது.

இந்த நிகழ்விலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு, தை இரண்டாம் வெள்ளியன்று வெளியான பதிவு

வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களின் வேதனையை தீர்க்கும் அம்மன்

https://www.alayathuligal.com/blog/zkggmx5ky6znlfya22yktgypgb9dfn

See this map in the original post