௳ (முகப்பு)

View Original

பொது ஆவுடையார் கோவில்

திங்கட்கிழமை இரவு மட்டுமே திறந்திருக்கும் சிவன் கோவில்

முடி வளர்வதற்காக பெண்கள் அளிக்கும் விளக்குமாறு காணிக்கை

பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது.

சிவபெருமான், வான் கோபர், மகாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கு இடையே, இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என ஏற்பட்ட சந்தேகத்தை இங்குள்ள ஆலமரத்தில் குருவடிவில் உட்கார்ந்து தீர்த்து வைத்தாராம் . இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து, நடுநிலையாக இருந்து சிவனார் அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு பொது ஆவுடையார் எனும் திருநாமம் அமைந்தது.

இந்த சம்பவம் திங்கட்கிழமையில் நடைபெற்றதால் பல வருடங்களாக திங்கட்கிழமை இரவு மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது. இங்கு மூலஸ்தானத்தில் உள்ள ஆலமரமே சிவனாக காட்சி அளிக்கிறார். வெள்ளால மரமே இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை இரவு மட்டுமே திறக்கப்படும் இந்த கோவில் இரவு நடுநிசி 12 மணி பூஜைக்கு பின்னர் நடை சாற்றப்படும். மீண்டும் மறுவாரம் தான் திறக்கப்படும். பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு சிவபெருமானே பிரதானம் என்பதால் அம்பாள் சன்னதி கிடையாது.

பெண்கள் அளிக்கும் வினோதமான விளக்குமாறு காணிக்கை

பெண்கள் தங்களுக்கு முடி வளர வேண்டும் என்பதற்காக இக்கோயிலுக்கு விளக்குமாற்றை காணிக்கையாக வேண்டிக்கொள்கிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை கொண்டு தாங்களே விளக்குமாற்றை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்கள். இப்படிச் செய்வதால் தென்னங்கீற்று போல தங்கள் முடியும் வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட விளக்குமாறுகள் ஆயிரக்கணக்கில் குவிந்து விடுகின்றன என்கிறார்கள்.

கார்த்திகை மாதம் சோமவாரத்துக்கு இங்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடம் ஒரு முறை தை பொங்கலன்று மட்டும்தான் இக்கோவில் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு இந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை. இவரை வேண்டிக் கொண்டு, எந்த வியாபாரத்தை துவங்கினாலும் லாபம் அமோகமாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள் .

See this map in the original post