௳ (முகப்பு)

View Original

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவீழிமிழலை . இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை.

இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, மிகவும் புகழ் பெற்ற வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வௌவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எந்தவித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தார் போல, ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து, மண்டபத்தின் கூரை உருவாக்கப்பட்டிருக்கிறது. வௌவால் தொங்க முடியாத வகையில் இருப்பதனால், வௌவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். நம் முன்னோர்கள் கட்டிடக் கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகின்றது.

தமிழகத்தின் அதிசயம் என துறை வல்லுனர்களால் ஒப்புகொள்ளப்பட்டதும், புதிதாக கற்றளி எழுப்பும்போது முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில்/சிற்ப வேலைப்பாடுகள் ஆறு ஆகும். அவை கடாரங்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை , தஞ்சை பெரியகோவில் விமானம் , திருவலஞ்சுழி கருங்கல் பலகணி , திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், திருநனிபள்ளி கோடி விட்டம் ஆகியவை ஆகும். முற்கால சிற்பிகள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தம் எழுதும்போது, மேற்கூறிய ஆறு வேலைப்பாடுகள் தவிர்த்து எந்த வேலைப்பாடும் தங்களால் செய்து தர முடியும் என்று உறுதி கொடுப்பார்களாகும். இதிலிருந்து இந்த வேலைப்பாடுகளின் உன்னதத் தன்மையை நாம் உணரலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

See this map in the original post