௳ (முகப்பு)

View Original

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம்

அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.

இந்த ஆறு அபிஷேகங்களில், மூன்று அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.

பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் 26.06.2023 திங்கட்கிழமையன்று நடைபெறுகின்றது.

See this map in the original post