திருமுருகநாதர் கோவில்
கூப்பிடு விநாயகர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.
ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்..
தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.
பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.
வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
https://www.alayathuligal.com/blog/fslce657bgkywwa86xyehg4cy7awxg