௳ (முகப்பு)

View Original

சூரியகோடீசுவரர் கோவில்

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக'

ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார்

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம் தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் ஆகும்.

சூரிய பகவான் பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்ற தலம்

ஒரு சமயம் சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிரதோஷ நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால், அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான்.

சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரியகோடீஸ்வரரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் காணிக்கையாகச் அர்ப்பணித்தார். அப்படி அவர் சமர்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்து, பின்னர் அந்த இடமே இலுப்பை மரக் காடாகியது. மாமுனிவர் இலுப்பை மர விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து மாலை வேளைகளில் கோடி தீபங்கள் ஏற்றி சூரியகோடீசுவரரை வழிபட ஆரம்பித்தார்.

பிரதோஷ காலத்தில் ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக் கொண்டடிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியபகவான் அந்த கோடி தீபங்களைக் கண்டு வணங்கி பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்றார்.

கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.

இக்கோவிலைப் பற்றிய காணொளிக் காட்சியைக் காண கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=5NT4j3QxcZY

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்

https://www.alayathuligal.com/blog/j2ry39pb9rbkk38j8gedc7mzzwsgyk

பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்

https://www.alayathuligal.com/blog/mjb5pcd9zlpzbrykamwss5myhh9s5n

See this map in the original post