திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
வைகுண்ட ஏகாதசி பலனை கொடுக்கும் ஆனந்த நிலைய பரமபதநாதர் தரிசனம்
திருமலையில் வெங்கடாஜலபதி கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுவதும் கல்லால் வேயப்பட்டு, பொன்னால் போர்த்தப்பட்டதாகும். பொதுவாக இறைவன் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை ‘விமானம்' என அழைக்கப்படும்.அவ்விமானத்திற்கு பெயரிட்டு பெருமையோடு அழைப்பது வைணவ ஆகமத்தின் சம்பிரதாயமாகும். சடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால் கிபி 12ம் நூற்றாண்டில் இக்கோவில் விமானம் புதுப்பிக்கப் பட்டதாகவும், பின்னர் .வீரநரசிங்கராயர் என்னும் மன்னன் தன்னுடைய எடைக்கு இணையாக கொடுத்த பொன்னால் இவ்விமானம் வேயப்பட்டதாகவும் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.
ஆனந்த நிலைய விமானத்தில் வடக்கு முகமாக வெள்ளியினால் வேயப்பட்ட ஒரு திருவாசியின் கீழ் விமான வெங்கடேஸ்வரர் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். வைகுண்டத்தில், பாற்கடலில் மஹாவிஷ்ணு ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் தொங்கவிட்டு எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ, அந்த கோலத்தில் தான் இங்கேயும் எழுந்தருளி இருக்கிறார். இவரை வருடத்தின் 365 நாளும் தரிசிக்கலாம், இவரை தரிசிப்பது வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை தரிசித்த பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.