திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் திருமலை அமிர்தகலசப் பிரசாதம்
திருமலை ஏழுமலையான் மடைப்பள்ளியில் தயாராகும் சிறப்பு நிவேதனம் லட்டு. திருமலை வேங்கடவனுக்கு 1715 ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது.உலகப் பிரசித்தி பெற்ற இப்பிரசாதம் புவிசார் குறியீடு( Geographical Indication) பெற்றுள்ளது. லட்டு தவிர வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை ஆகிய நிவேதனங்களும் தயாராகின்றன. மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மவுகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு, ஏழுமலையானின் அடியார்களான பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. திருமலை மடைப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகளை, சீனிவாசப் பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.
அமிர்தகலசப் பிரசாதம்
ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருப்பதி பெருமாளுக்கு அமிர்தகலசம் என்ற பிரசாதம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செய்த பிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இப் பிரசாதத்தின் சிறப்பு என்னவென்றால், அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான். அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது. அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம். இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.