திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்
அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ பைரவர்
திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.
காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். அதனால் காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.
பொதுவாக சிவாலயங்களில் பைரவர் நின்ற நிலையில் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் பைரவர், யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக பைரவராக ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். .நாய் வாகனமும் இவருக்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் வழங்கும் பைரவர்
இத்தல பைரவரை, பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் மிகுந்த செல்வம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வன்னி' இலைகளைக் கொண்டு யோக பைரவருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜைக்கு பயன்படுத்தப்படும் வன்னி இலைகளால் தயாரிக்கப்படும் பொடியை தினமும் உட்கொண்டால் நரம்பு கோளாறுகள் மற்றும் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். யோக பைரவரை இங்கு வழிபட்டு வந்தால், ஒருவரை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும். 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சிவப்பு அரளி' பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அமாவாசை தினங்களில் தயிர் சாதம், தேங்காய் சாதம், தேன் ஆகியவற்றைச் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் தனது செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவும், வியாபாரத்தில் லாபம் பெறவும் உதவுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள, ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் பருப்பு மற்றும் நெய்யால் செய்யப்பட்ட வடை படைத்து, பூஜை செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்
https://www.alayathuligal.com/blog/d3kkjkrm768e9m6d4sbfws75pha8p9?rq