௳ (முகப்பு)

View Original

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்

நெற்றியில் நாமத்துடன் இருக்கும் நந்தி

புதுக்கோட்டை- ராமேசுவரம் சாலையில் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் நாமபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில், திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதை மால்விடை என்பார்கள். மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார்.

புதன் பிரதோஷம்

சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.

இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் , வழக்கமாக உடன் இருக்கும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக, இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு தலம் உள்ளதால், இத்தலத்தை இரண்டாம் குரு தலம் என்று சிறப்பிக்கின்றனர்.

பிரார்த்தனை

குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் நீங்கவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நெற்றியில் நாமத்துடன் இருக்கும் நந்தி

See this map in the original post