அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
காசிக்கு இணையான காலபைரவர் தலம்
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.
புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.
காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.
பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.
இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.